திருச்சி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரம்
திருச்சி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மதுரை ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
திருச்சி,
தமிழகத்தில் மாவட்டந்தோறும் பல இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சுவதோடு, அதிகமான கார்பன் டை ஆக்சைடுவையும் வெளிவிடுகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பான பணிகளை திருச்சி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி ஆகியோர் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
நீதிபதி ஆய்வுஇந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்வதற்காக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி செல்வம் நேற்று திருச்சி வந்தார். அப்போது அவரை திருச்சி விமானநிலைய பகுதி, துப்பாக்கி தொழிற்சாலை, மாத்தூர், ஜே.கே.நகர், ஜெயில்கார்னர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை காட்டினர்.
உடனே நீதிபதி செல்வம், சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களை பார்த்து எந்த பயனும் இல்லை. அகற்றப்படாத இடங்கள் ஏதேனும் உள்ளதா? என கேட்டார். இதையடுத்து பொன்மலைப்பட்டி சாலையில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து இருந்ததை அவர் பார்வையிட்டார். அப்போது அந்த சீமைக்கருவேல மரங்களை விரைந்து அகற்றும்படி ரெயில்வே அதிகாரிகளிடம் அவர் கூறினார்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவைஇதனை தொடர்ந்து நீதிபதி செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், “சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். வருகிற 21–ந் தேதிக்குள் அனைத்து இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாக அனைத்து இடங்களிலும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்“ என்றார். அதன்பிறகு நீதிபதி செல்வம் அங்கிருந்து காவிரி ஆற்றுப்படுகைகளிலும், கொள்ளிடம், ஜீயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று சீமைக்கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு வருகிறதா? என்பதனை பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ். மாநகராட்சி நகர பொறியாளர் நாகேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.