ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜி.கே.வாசன் பேட்டி


ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜி.கே.வாசன் பேட்டி
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 1 April 2017 1:39 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

திருச்சி,

திருச்சி கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட த.மா.கா. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் நந்தா செந்தில்வேல் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர்கள் குணா (திருச்சி தெற்கு), ரவீந்திரன் (வடக்கு), பொருளாளர் தனபால், விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன் உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

துரோகம் கூடாது

உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா.வின் பலம் அறிந்து ஒத்த கருத்துடன் பேசவரும் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொள்வோம். அதற்கு முன்பாக கட்சியை பலப்படுத்துவதற்காக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உள்பட எந்த பகுதி மக்களும் ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதை விரும்பவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு துரோகம் செய்யாமல் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர லாரி உரிமையாளர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லை என்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

மாற்றத்தை ஏற்படுத்தும்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முறைகேடுகள் இன்றி ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். இதனை கருத்தில் கொண்டு பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதுவரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் இருப்பது நிரந்தர அரசா, தற்காலிக அரசா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேர்தல் முடிவுகள் தொடர்பாக வரும் கருத்து கணிப்புகளை விட மக்களின் கணிப்பு தான் இறுதியானதாகும்.

முறைகேடு புகார்

விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் போராட உரிமை இருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை பற்றி தேசிய தலைவர்கள் தடித்த வார்த்தைகளை பேசுவது நல்லது அல்ல. தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்டு வேதனையில் உள்ள விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story