பெலகாவி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல் என்ஜினீயரிங் மாணவர் கைது


பெலகாவி அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டல்  என்ஜினீயரிங் மாணவர் கைது
x
தினத்தந்தி 1 April 2017 1:40 AM IST (Updated: 1 April 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதுடன், அதனை குறுந்தகட்டில் பதிவு செய்து பள்ளிக்கு அனுப்பிய என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு,

பெலகாவி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதுடன், அதனை குறுந்தகட்டில் பதிவு செய்து பள்ளிக்கு அனுப்பிய என்ஜினீயரிங் மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவி பாலியல் பலாத்காரம்

பெலகாவி மாவட்டம் கடே பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவள், பள்ளிக்கூடம் ஒன்றில் 7–ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த தம்பதி வீட்டில் சிவக்குமார் (22) என்பவர் வாடகைக்கு தங்கி இருந்தார். இவர், தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியுடன் சிவக்குமார் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவியை சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவியை பலாத்காரம் செய்ததை சிவக்குமார் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவதாக கூறியும், அந்த காட்சிகளை காட்டியும் மாணவியை மிரட்டி அடிக்கடி சிவக்குமா£ர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது.

மாணவர் கைது

இதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். உடனே ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், சிவக்குமாரை தங்களது வீட்டில் இருந்து அடித்து விரட்டியதாக தெரிகிறது. இந்த விவகாரம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சிவக்குமார் மீது போலீசில் எந்த புகாரும் கொடுக்காமல் மாணவியின் பெற்றோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ காட்சியை, ஒரு குறுந்தகட்டில் (சி.டி.) பதிவு செய்து, அதனை மாணவி படிக்கும் பள்ளிக்கு சிவக்குமார் அனுப்பி வைத்தார்.

அந்த குறுந்தகட்டை பார்த்து பள்ளியின் முதல்வர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நடந்த சம்பவங்களை கூறி கடே பஜார் போலீஸ் நிலையத்தில் பள்ளியின் முதல்வர் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தார்கள். அவரிடம் இருந்து வீடியோ காட்சிகள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சிவக்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story