நஞ்சன்கூடு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார், சித்தராமையா


நஞ்சன்கூடு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார், சித்தராமையா
x
தினத்தந்தி 1 April 2017 3:00 AM IST (Updated: 1 April 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

நஞ்சன்கூடு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாத்தை நேற்று முதல் சித்தராமையா தொடங்கினார்.

மைசூரு,

நஞ்சன்கூடு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாத்தை நேற்று முதல் சித்தராமையா தொடங்கினார்.

இடைத்தேர்தல்

மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தொகுதிகளில் வருகிற 9–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நஞ்சன்கூடு தொகுதியில் களளே கேசவமூர்த்தியும். குண்டலுபேட்டை தொகுதியில் மறைந்த மந்திரி மாதேவ பிரசாத்தின் மனைவி கீதா மகாதேவபிரசாத்தும் போட்டியிடுகின்றனர். பா.ஜனதா சார்பில் நஞ்சன்கூடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த சீனிவாச பிரசாத்தும், குண்டலுப்பேட்டை தொகுதியில் நிரஞ்சன் குமாரும் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 15 நாட்களாக மந்திரிகள் எச்.சி.மகாதேவப்பா, யு.டி.காதர், ஈஸ்வர் கன்ட்ரே, வினய் குல்கர்னி உள்பட பலர் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதேபோல் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர், ஈசுவரப்பா, ஷோபா எம்.பி., உள்பட பல தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வந்ததால் சித்தராமையா இந்த இடைத்தேர்தலில் இதுவரை தேர்தல் பிரசாரம் செய்யாமல் இருந்து வந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டு வந்தது.

சித்தராமையா பிரசாரத்தை தொடங்கினார்

இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த நிலையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை நஞ்சன்கூடு தொகுதியில் சித்தராமையா தொடங்கினார். இதற்காக நேற்று முன்தினம் கார் மூலம் மைசூரு வந்த சித்தராமையா இரவு ராமகிருஷ்ணா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தங்கினார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு நஞ்சன்கூடு சென்றார்.

அங்கு காங்கிரஸ் வேட்பாளரான களளே கேசவமூர்த்தியை ஆதரித்து சித்தராமையா தனது பிரசாரத்தை தொடங்கினார். அவர், கடந்த 4 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் செய்த வளர்ச்சிப் பணிகள், நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குசேகரித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு பதவிக்காக தற்போது பா.ஜனதாவில் சேர்ந்து, நஞ்சன்கூடு தொகுதியில் போட்டியிடும் சீனிவாச பிரசாத்திற்கு மக்கள் தகுந்தபாடம் கற்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதைதொடர்ந்து சித்தராமையா, கோலூரூ, சின்னதஉண்டி, வீரதேவன புரா, பதனவாலு, தேவனூரு, சிக்ககவலந்தே பகுதிகளிலும் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் வேட்பாளர் களளே கேசவமூர்த்திக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

மந்திரிகளும் வாக்கு சேகரிப்பு

மேலும் மதியம் 12 மணி அளவில் தொட்டேகவலந்தே பகுதியில் சித்தராமையா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து நேரளே, எடதலே, எம்மரகலா உள்பட பல்வேறு கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர ஓட்டு வேட்டையாடினார். இந்த பிரசாரத்தின் போது சித்தராமையாவுடன் மந்திரிகள் மகாதேவப்பா, யு.டி.காதர், தன்வீர் சேட் உள்பட 10 மந்திரிகள் சென்றிருந்தனர்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களை ஆதரித்து சித்தராமையா பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளதால் அந்த கட்சிக்கு யானை பலம் வந்து உள்ளதாக நஞ்சன்கூடு தொகுதி காங்கிரசார் கூறுகிறார்கள். சித்தராமையா வருகிற 7–ந் தேதி வரை இரு தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

குண்டலுபேட்டையில் எடியூரப்பா

நஞ்சன்கூடு தொகுதியில் நேற்று சித்தராமையா தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டதால் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா குண்டலுபேட்டை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நிரஞ்சன்குமாரை ஆதரித்து குண்டலுபேட்டையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அதேப் போல் நஞ்சன்கூடு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சீனிவாச பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் நஞ்சன்கூடு, குண்டலுபேட்டை இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.


Next Story