திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்: ரூ.262 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்


திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்: ரூ.262 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 1 April 2017 4:30 AM IST (Updated: 1 April 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட்: ரூ.262 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் ஆணையாளர் அசோகன் தகவல்

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாநகர மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.262 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆணையாளர் அசோகன் தெரிவித்தார்.

மாநகராட்சி பட்ஜெட்

திருப்பூர் மாநகராட்சி 2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையாளர் அறையில் நேற்று மதியம் நடைபெற்றது. மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததால் தற்போது தனி அதிகாரியான ஆணையாளர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் நடந்து வருகிறது.

இதையொட்டி 2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட் புத்தகத்தை தனி அதிகாரியான ஆணையாளர் அசோகன் வெளியிட செயற்பொறியாளர் தமிழ்செல்வன் பெற்றுக்கொண்டார். உதவி ஆணையாளர்(கணக்கு) சந்தானகிருஷ்ணன், மண்டல உதவி ஆணையாளர்கள் செல்வநாயகம், வாசுகுமார், கண்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

பற்றாக்குறை

பட்ஜெட் குறித்து ஆணையாளர் அசோகன் கூறியதாவது:–

திருப்பூர் மாநகராட்சியின் பட்ஜெட்டில் மொத்த வரவினமாக ரூ.648 கோடியே 73 லட்சத்து 53 ஆயிரமும், மொத்த செலவினமாக ரூ.656 கோடியே 61 லட்சத்து 54 ஆயிரமும், பற்றாக்குறையாக ரூ.7 கோடியே 88 லட்சத்து ஆயிரமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வருவாய் நிதியில் ரூ.1 கோடியே 31 லட்சத்து 26 ஆயிரம் உபரியாகவும், கல்வி நிதியில் ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் உபரியாகவும் உள்ளது. குடிநீர் வடிகால் நிதியில் ரூ.9 கோடியே 23 லட்சத்து 99 ஆயிரம் பற்றாக்குறையாக உள்ளது. குடிநீர் கட்டணத்தில் எதிர்பார்த்த நிதி கிடைக்காததால் இந்த பற்றாக்குறை நிலவுகிறது.

குடிநீர் திட்டப்பணிகள்

திருப்பூர் மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யும் நடவடிக்கையாக அம்ரூத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் 26 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 15 கீழ்நிலை தொட்டிகள் கட்டவும், 483 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் வினியோக குழாய்கள் பதிக்கவும் ரூ.262 மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு மத்திய அரசால் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த புள்ளிகள் அறிவிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த பணிகள் 2 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து விட்டால் மாநகராட்சி பகுதியில் தினமும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியும். இதுதவிர பவானி ஆற்றை நீராதாரமாக கொண்டு 4–வது குடிநீர் திட்டம் ரூ.750 கோடியில் செயல்படுத்த திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு உத்தரவு விரைவில் கிடைக்கும். அப்படி கிடைத்து விட்டால் மாநகரில் எதிர்வருகிற 30 ஆண்டுகளுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

திடக்கழிவு மேலாண்மை

திடக்கழிவு மேலாண்மை பணியில் கட்டிட கட்டுமான பொருட்களை மறுசுழற்சி பயன்படுத்தும் வகையில் பொருட்களை தயார் செய்யும் ஆலை, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.9 கோடியே 92 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி மதிப்பில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும் மாநகரில் உள்ள 8 பூங்காக்கள் ரூ.3 கோடியே 92 லட்சத்தில் மேம்பாடு செய்யப்படும். ரூ.20 கோடியே 30 லட்சத்தில் சாலையோர நடைபாதைகள் மற்றும் சைக்கிள் செல்லும் பாதைகள் அமைக்கப்படும். ஆண்டிப்பாளையம் குளத்தை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5 கோடியே 60 லட்சத்தில் பொலிவுபடுத்தப்படும்.

புதிய சாலைகள்

ரூ.110 கோடி மதிப்பில் நகர் மற்றும் ஊரமைப்புத்துறையின் மானியத்துடன் 70 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய சாலைகள், 59 கிலோ மீட்டர் நீளத்துக்கு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர் மறுசுழற்சிக்கு பயன்பாடு செய்யும் வகையில் அதில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான ஆலை, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சர்கார் பெரியபாளையத்தில் செயல்படுத்தப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பூர் மாநகரம் இந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் 2 இடங்களில் நவீன ஆடுவதை கூடங்கள்

திருப்பூர் சந்தைப்பேட்டையில் ஆடுவதை கூடம் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆடுவதை கூடம் சரிவர செயல்படாமல் உள்ளது. இந்த நிலையில் வெங்கமேடு மற்றும் மண்ணரை பகுதியில் நவீன வசதிகளுடன் ஆடுவதை கூடங்கள் அமைக்கவும், ஏற்கனவே உள்ள சந்தைப்பேட்டை ஆடுவதை கூடத்தை நவீனப்படுத்தவும் ரூ.30 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் அங்கீகாரம் வழங்கி உள்ளது. முதல்முறையாக திருப்பூர் மாநகராட்சியில், கோழிகளை இந்த வதை கூடங்களுக்கு கொண்டு சென்று வெட்டி தீவிர பரிசோதனைக்கு பிறகே பொதுமக்களுக்கு இறைச்சி விற்பனை செய்யும் நடைமுறை வர உள்ளது.

பட்ஜெட் துளிகள்

* மாநகரில் தெருவிளக்குகள் அமைக்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாநகராட்சிக்கு சொந்தமான 122 கட்டிடங்களில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சூரியஒளி மின்சக்தி அமைப்பு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* பள்ளிகளுக்கான கட்டிட வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்ய ரூ.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மண்டலங்களுக்கான நிதி ஒதுக்கீடு தற்போது மண்டலம் ஒன்றுக்கு பொதுப்பணிக்கு ரூ.2 கோடி வீதம் மொத்தம் 8 கோடியும், குடிநீர் வினியோக பணிகளுக்கு மண்டலம் ஒன்றுக்கு ரூ.1 கோடி வீதம் ரூ.4 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 1,008 தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.2 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மாநகராட்சி பகுதியில் சாலையோர வியாபாரிகள் 1,154 பேர் உள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபாரம் செய்வதற்கான வியாபார மையம் கட்டப்பட உள்ளது. மேலும் அவர்களுக்கு திறன் மற்றும் பயிற்சி மூலம் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி மூலமாக கடன் உதவி வழங்கப்பட உள்ளது.


Next Story