திண்டுக்கல்லில் விவசாயிகளுக்கு ஆதரவாக செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்


திண்டுக்கல்லில் விவசாயிகளுக்கு ஆதரவாக செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம்
x
தினத்தந்தி 1 April 2017 4:45 AM IST (Updated: 1 April 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், விவசாயிகளுக்கு ஆதரவாக செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த சேசு அந்தோணி என்பவருடைய மகன் சுதாகர் (வயது 35). இவர், திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே, மோட்டார் சைக்கிளில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று மேற்கு மரியநாதபுரத்தில் சுதாகர் தனது நண்பர்களுடன் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென அங்குள்ள செல்போன் டவரில் ஏறத்தொடங்கினார். அவர் ஒரு பேனரையும் கொண்டு சென்றார். அதில், டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. சுதாகர் செல்போன் கோபுரத்தின் மேலே ஏறுவதை பார்த்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

போராட்டம்

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அழகுராஜ், மாரிமுத்து மற்றும் போலீசார் அங்கு வந்தனர். போலீசார் சுதாகரை கீழே இறங்க வலியுறுத்தினர். ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து, கையில் பேனருடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே தீயணைப்பு வீரர்களும் அங்கு வந்தனர்.

பின்னர் அவருடைய நண்பர்கள் கீழே இறங்க வலியுறுத்தினர். உடனே அவர் கீழே இறங்கினார். அப்போது அவரிடம் கேட்டபோது, தமிழகத்தில் வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

பரபரப்பு

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம். இதற்காக, போலீசாரிடம் அனுமதி கேட்டோம்.

ஆனால் எங்களுக்கு போலீசார் அனுமதி தரவில்லை. இதனால் நான் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினேன், என்றார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் வாகனத்தில் ஏற்றி வடக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story