பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து போக்குவரத்து பாதிப்பு
வில்லியனூர் அருகே பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
வில்லியனூர்,
புதுவை முத்திரையர் பாளையத்தை சேர்ந்தவர் முருகன்(வயது55). ஊர் ஊர்ராக சென்று பழைய இரும்பு, பிளாஸ்டிக், பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். வில்லியனூர் அருகே உள்ள தொண்டமாநத்தத்தில் இதற்காக பெரிய பிளாஸ்டிக் குடோன் உள்ளது. அங்கு பழைய பொருட்கள் அனைத்தும் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று பகல் 1 மணி அளவில் பூட்டி இருந்த அந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. புகை மூட்டத்தால் சுற்றுப்புற கிராம பகுதி மக்கள் அவதிப்பட்டனர். சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதை தொடர்ந்து புதுவை, கோரிமேடு, வில்லியனூர், ரெட்டியார்பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த தீ விபத்து காரணமாக சேதராப்பட்டு– வில்லியனூர் பாதையில் போக்கு வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.5 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. தீ விபத்து குறித்து தகவல் தெரிவிப்பதற்காக அக்கம் பக்கத்தினர் குடோனின் உரிமையாளர் முருகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் பதில் தெரிவிக்கவில்லை. இந்த தீ விபத்து குறித்து வில்லியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.