சுகாதாரத்துறையை ஊழியர்கள் முற்றுகை
பணிநிரந்தரம் செய்யக்கோரி சுகாதாரத்துறையை ஊழியர்கள் முற்றுகை
புதுச்சேரி,
தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் அரசு சுகாதாரத்துறையில் ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக 600–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி இவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையொட்டி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் நாள் செயற்கையான பணித் துண்டிப்பு மற்றும் ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், இதனை கண்டித்தும் சுகாதாரத்துறை அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சம்மேளனத்தின் கவுரவ தலைவர் பாலமோகனன் தலைமை தாங்கினார். இதில் சுகாதார இயக்க ஊழியர்கள் சங்க தலைவர் வெற்றிவேல், செயலாளர் பிரகதீஸ்வரன், துணைத்தலைவர் வினோத் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து அவர்களுடன் சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது செயற்கை பணித்துண்டிப்பு ரத்து செய்யப்படும் என உறுதியளித்தார். அதை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.