லாரி உரிமையாளர்கள் 2–வது நாளாக வேலை நிறுத்தம்: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று 2–வது நாளாக நீடித்தது. இதனால் புதுவையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி,
வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியதற்கும், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை போக்குவரத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதற்கு லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையை கைவிடக்கோரி கடந்த 30–ந் தேதி முதல் தென்னிந்திய அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். இதில் புதுவை மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். 2–வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. இதனால் புதுவையில் 6 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதில் டேங்கர் லாரிகள், மினிவேன், டிரைலர்கள், கன்டெய்னர் லாரிகளும் அடங்கும்.
விலை உயரும் அபாயம்பெரும்பாலான லாரிகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள கனரக ஊர்தி முனையம் மற்றும் புதுவை–சென்னை பைபாஸ் சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு சரக்குகள் ஏற்றி வந்த லாரிகளும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த லாரிகளின் டிரைவர் மற்றும் கிளீனர்கள் அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து தான் புதுவைக்கு காய்கறி, பழங்கள், பூ, மளிகை பொருட்கள் உள்பட பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம். தற்போது லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ள நிலையில் இந்த போராட்டம் தொடருமானால் இவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.