மேல்–சபையை கலைக்கும் திட்டம் இல்லை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்


மேல்–சபையை கலைக்கும் திட்டம் இல்லை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம்
x
தினத்தந்தி 1 April 2017 3:30 AM IST (Updated: 1 April 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மேல்–சபையை கலைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மும்பை,

மராட்டிய மேல்–சபையை கலைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்று முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

கலைக்க கோரிக்கை

மராட்டிய சட்டசபையில் நேற்று முன்தினம் பா.ஜனதா எம்.எல்.ஏ. அனில் கோடே பேசும்போது, மேல்–சபையை கலைக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேல்–சபை என்பது அரசியல் சாசன உரிமை அல்ல, சட்டசபையில் நிறைவேற்றப்படும் சட்டங்கள், மேல்–சபையால் முடக்கப்படுகின்றன, எனவே அதை கலைக்க வேண்டும் என்று பேசினார்.

இதற்கு உடனடியாக மேல்–சபையில் எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் அளித்த விளக்கத்தில் அவர்கள் திருப்தி அடையவில்லை. எனவே மேல்–சபை நேற்று முன்தினம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

இந்த நிலையில் மேல்–சபையில் நேற்று 2–வது நாளாக பிரச்சினை கிளப்பப்பட்டது. மேல்–சபைக்கு பா.ஜனதா அவமதிப்பு செய்து விட்டதாக சுனில் தத்காரே (தேசியவாத காங்கிரஸ்) குற்றம் சாட்டினார். மேல்–சபையை கலைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அனில் கோடேவிற்கு, பா.ஜனதா ஏன் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பவில்லை என்று நாராயண் ரானே (காங்கிரஸ்) கேள்வி எழுப்பினார்.

விவசாயிகள் பிரச்சினையை திசை திருப்பவே, அனில் கோடே எம்.எல்.ஏ. மூலம் பா.ஜனதா நாடகமாடுவதாக ஜெயந்த் பாட்டீல் (பி.டபுள்யூ.பி. கட்சி) குற்றம் சாட்டினார்.

முதல்–மந்திரி விளக்கம்

இதைத் தொடர்ந்து முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்து பேசியதாவது:–

மேல்–சபையை கலைக்க வேண்டும் என்று கோரிய எங்களது கட்சி எம்.எல்.ஏ. அனில் கோடேவை எச்சரித்து உள்ளோம். இதுபோன்ற முறையற்ற கருத்தை இனிமேல் தெரிவிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேல்–சபைக்கு என தனி வரலாறு உண்டு. மாநில அரசுக்கு மேல்–சபை சிறந்த வழிகாட்டியாக உள்ளது. ஜனநாயக முறையில் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மேல்–சபையில் தீர்வு காணப்படுகிறது.

அனில் கோடேயின் கருத்தை அரசு மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் நானும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மேல்–சபையை கலைக்கும் திட்டம் அரசிடம் இல்லை. இந்த சபையின் மாண்பை மாநில அரசு காக்கும்.

இவ்வாறு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.


Next Story