தானேயில், மேற்கூரையை உடைத்து கொண்டு வீட்டுக்குள் விழுந்த சிறுத்தைப்புலியால் பரபரப்பு தாய், மகள் உயிர் தப்பினர்
தானேயில் மேற்கூரையை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் விழுந்த சிறுத்தைப்புலியால் பரபரப்பு ஏற்பட்டது.
தானே,
தானேயில் மேற்கூரையை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் விழுந்த சிறுத்தைப்புலியால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் தாய், மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தாய், மகள்தானே கோட்பந்தர் ரோடு ரேத்தி பந்தர் பகுதியை சேர்ந்த பெண் சாங்கர் வாதே. இவரது மகள் அசல்(வயது12). சம்பவத்தன்று இரவு சாங்கர் வாதே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அசல் படித்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் திடீரென அவர்களது வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டினாலான மேற்கூரையில் ஏதோ விழுந்த பயங்கர சத்தம்கேட்டது.
இதனால் பதறிப்போன இருவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அடுத்த சில நொடியில் மேற்கூரை உடைந்தது. அந்த வழியாக வீட்டிற்குள் பெரிய சிறுத்தைப்புலி ஒன்று விழுந்தது.
சிறுத்தைப்புலிஇதை பார்த்து தாய், மகள் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும் சிறுத்தைப்புலி பாய்ச்சலுடன் வெளியே ஓடி வந்தது. தாய், மகள் இருவரையும் அது ஒன்றும் செய்யவில்லை. பின்னர் தெருவில் நின்ற ஒரு நாய்க்குட்டியை சிறுத்தைப்புலி வாயில் கவ்வி காட்டிற்குள் தூக்கிச்சென்று விட்டது. இதனால் தாய், மகள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சிறுத்தைப்புலி சஞ்சய் காந்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து இரை தேடி வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாங்கர் வாதேயின் வீட்டின் மேற்கூரை மீது பாய்ந்துள்ளது. இதில் பாரம் தாங்க முடியாமல் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டினாலான மேற்கூரை இடிந்து வீட்டுக்குள் சிறுத்தைப்புலி விழுந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.