‘வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த ஒரே மொழி தமிழ்’ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேச்சு
தேவகோட்டையில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில், வாழ்க்கைக்கு இலக்கணம்
தேவகோட்டை,
தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ்த்துறை சார்பில் செம்மொழி தமிழாய்வு என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கம் மத்திய நிறுவனத்தின் நிதியுடன், பேராசிரியர் முருகன் ஒருங்கிணைப்பின்படி நடைபெற்றது. பயிலரங்க தொடக்க விழாவிற்கு கல்லூரி ஆட்சிமன்ற குழுத்தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கவிஞர் தங்கம்மூர்த்தி சிறப்புரையாற்றினார். இதனைத்தொடர்ந்து பயிலரங்கம் 10 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ–மாணவிகள் கலந்துகொண்டனர்.
வாழ்க்கை இலக்கணம்பின்னர் நடைபெற்ற பயிலரங்க நிறைவு விழாவில் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் வரவேற்று பேசினார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முருகன் கருத்துரு வழங்கினார். ஆனந்தா கல்லூரி முதல்வர் ஜான் வசந்தகுமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பயிலரங்க ஆய்வு கோவையை வெளியிட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
செவ்வியல் இலக்கியத்தை செம்மைபடுத்துகிற அரிய பணியினை செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சிறப்பாக செய்து வருகிறது. உலகத்தின் மொழிகள் எழுத்திற்கும், சொல்லிற்கும் இலக்கணம் வகுத்தபோது, வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த ஒப்பற்ற ஒரே மொழி தமிழ். தமிழ் மொழி அரசவையில் உலா வந்து, கோவில்களில் வலம் வந்தது. இதனால் நம் தேசத்தை கடை கோடி மனிதனும், அடித்தட்டு மனிதனும் சிந்தித்த காலம் உண்டு. இவற்றையெல்லாம் தாண்டி இந்த கணினி யுகத்தில், வளர்ந்த அறிவியல் உலகிற்கு ஏற்றவாறு தன்னை தவப்படுத்துகிற பெரும் பொறுப்பு தமிழுக்கு இருக்கிறது. அதை நிறைவேற்றுகிற பெரும் பொறுப்பு தமிழனுக்கு இருக்கிறது.
தொழில்நுட்பம்உலகத்தின் பழமையான மொழிகளில் எல்லா துறைகளுக்கும் ஏற்றவாறு வளப்படுத்தி நிற்கிற 2 மொழிகளில் ஒன்று சீனம், மற்றொன்று நம் தமிழ்மொழியாகும். தமிழ் மொழிதான் வளர்ந்த தொழில்நுட்பத்திற்கு ஈடாக, பழமையான, தொன்மையான காலத்திற்கு ஏற்றவாறு விரவியும், பரவியும் நிற்கிறது. வளர்ச்சியடைந்த நாடுகளின் வெற்றிக்கு காரணம் அறிவியல் தொழில்நுட்பம், கடைக்கோடி மனிதனின் வீட்டுக்கதவை தட்டுகிறது. நம் நாட்டில் தாய்மொழியில் அறிவியலும், தொழில்நுட்பமும் பயிற்றுவிக்கும் போதுதான் கடைகோடி மனிதனின் வீட்டு வாயிலை அடைய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் தமிழ்த்துறை தலைவர் மாரிமுத்து நன்றி கூறினார்.