சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மாவட்டத்தில், 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மாவட்டத்தில், 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 1 April 2017 11:00 PM GMT (Updated: 1 April 2017 1:28 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி கடலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்த 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

கடலூர்,

தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று இரவு முதல் தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்த டாஸ்மாக் மதுகடைகள் மூடப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்டத்தில் 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 224 டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன. கடந்த சட்டசபை தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றதும் மாவட்டத்தில் 14 மதுக்கடைகளும், பின்னர் அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததையடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்–அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் 19 மதுக்கடைகளும் என 33 மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன.

மது பிரியர்கள் தவிப்பு

தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மேலும் 124 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளின் எண்ணிக்கை 67 ஆக குறைந்துள்ளது.

மதுக்கடைகள் மூடப்பட்டதை மது பிரியர்களுக்கு தெரிவிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மதுக்கடை மூடப்படுகிறது என மதுக்கடை ஊழியர்கள் பேப்பரில் எழுதி மதுக்கடையின் முன்பு ஒட்டினர். ஆனால் இது தெரியாமல் மதுகுடிக்க வந்த மது பிரியர்கள் மதுக்கடை மூடியிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களிடம் மதுக்கடை ஊழியர்கள் கடை மூடப்பட்ட விவரத்தை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள வேறு கடைக்கு சென்று மது அருந்தினர். மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மது குடிக்க முடியாமல் தவித்தனர்.

மாற்றுப்பணி

இந்த நிலையில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் சரவணன் கூறும்போது, தற்போது மூடப்பட்டுள்ள 124 டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றும் இடம் பார்க்கும்படியும், அதுவரை மூடப்பட்ட மதுக்கடைகளை அங்கு பணிபுரிந்த வந்த ஊழியர்களை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மதுக்கடைகளை காவல் காக்க வேண்டியது டாஸ்மாக் பணியாளர்களின் வேலை அல்ல. ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மதுபானங்கள் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் டாஸ்மாக் பணியாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். மூடப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப பிறதுறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணி வழங்க வேண்டும் என்றார்.


Next Story