மாவட்டத்தில் 1.72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது


மாவட்டத்தில் 1.72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 2 April 2017 4:30 AM IST (Updated: 1 April 2017 7:01 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 533 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

கிருஷ்ணகிரி

நாடு முழுவதும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 533 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் 898 மையங்களிலும், கிருஷ்ணகிரி, ஓசூர் நகராட்சி பகுதிகளில் 53 மையங்களிலும் என மொத்தம் 951 மையங்களில் இந்த சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் முகாமை, கலெக்டர் கதிரவன் தொடங்கி வைக்கிறார்.

நடமாடும் முகாம்கள்

இதை தவிர பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தங்கி உள்ளவர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், பொம்மை விற்பனையாளர்கள் ஆகியோர்களின் குழந்தைகளுக்கு நடமாடும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பணியில் சுகாதாரத்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 800 பேர் ஈடுபடுகிறார்கள். எனவே 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு அழைத்து சென்று சொட்டு மருந்து வழங்கிடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Next Story