சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டம் 34 பேர் கைது


சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகை போராட்டம் 34 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2017 4:45 AM IST (Updated: 1 April 2017 7:02 PM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர்

கிருஷ்ணகிரி

தமிழகத்தில் 5 ஆயிரத்து 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், தனியார் நிறுவனங்களும் பராமரித்து வருகின்றன. சாலை அமைக்க செலவிடப்பட்ட தொகையை ஈடுகட்டவும், பராமரிப்பு செலவுகளுக்காகவும் 43 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிப்பு மையங்கள் உள்ளன.

இந்த மையங்களில் ஆண்டுதோறும் 10 சதவீத கட்டண உயர்வுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1–ந் தேதி, செப்டம்பர் 1–ந் தேதி மற்றும் அக்டோபர் 15–ந் தேதி என 3 கட்டங்களாக கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

முற்றுகை போராட்டம்

சாலை அமைப்புக்கான பணத்தை ஈடு செய்த பின், சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். ஆனால் புதிய சாலை விரிவாக்கம், புதிய சுங்க வசூலிப்பு நிறுவன நியமனம் உள்ளிட்ட பல காரணங்களால் சுங்க கட்டணம் அதிகரிப்பது தொடர்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. அதன் கட்டண உயர்வின் மூலம் ஒரு நாளில் சென்று திரும்பும் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 25 வரையும், மாதாந்திர கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு ரூ. 85 முதல் ரூ. 565 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்தும், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றிட வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.

இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் சானாவுல்லா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பாரதி ராமச்சந்திரன் (மத்திய மாவட்டம்), நெப்போலியன் (கிழக்கு), சபரிநாதன் (மேற்கு), மாவட்ட தலைவர்கள் ஆனந்த கிருஷ்ணன்(கிழக்கு), நாகேஷ்பாபு (மேற்கு), கிழக்கு மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மீனா, ஓசூர் நகர தலைவர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

34 பேர் கைது

அப்போது மத்திய அரசை கண்டித்தும், சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக 34 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்கள். இதன் காரணமாக கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story