நாமக்கல் மண்டலத்தில் இருந்து பண்ணையாளர்களின் சொந்த லாரிகள் மூலம் முட்டைகள் அனுப்பும் பணி தொடங்கியது கேரளாவில் வினியோகிப்பதில் சிக்கல்
லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்
நாமக்கல்,
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வு ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கடந்த 30–ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது.
தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு முதல் 2 நாட்கள் ஆதரவு அளித்தது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து நேற்று முன்தினம் வரை எந்த ஒரு பகுதிக்கும் முட்டைகள் விற்பனைக்கு எடுத்து செல்லப்படவில்லை. எனவே, சுமார் 6 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்தன.
முட்டைகள் அனுப்பும் பணிஇதற்கிடையே, நேற்று லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் நீடித்தாலும், தொடர்ந்து முட்டைகள் தேங்கி வருவதை தவிர்க்க, கோழிப்பண்ணையாளர்கள் தங்களுக்கு சொந்தமான லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் முட்டைகளை விற்பனைக்கு அனுப்பும் பணியை தொடங்கினர்.
இதுகுறித்து கோழிப்பண்ணையாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:–
தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் முட்டைகளை அதிக நாட்கள் பாதுகாப்பாக வைத்து இருக்க முடியாது. அதிக அளவிலான முட்டைகளை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு வசதியும் இங்கு இல்லை. எனவே, பெரும்பாலான கோழிப்பண்ணையாளர்கள் தங்களுக்கு சொந்தமான வாகனங்களில் முட்டைகளை விற்பனைக்கு ஏற்றி செல்ல தொடங்கி உள்ளனர். இவ்வாறு முட்டைகள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என லாரி உரிமையாளர்களிடமும், அரசிடமும் நாங்கள் கோரிக்கை வைத்து உள்ளோம்.
வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்கோழிப்பண்ணையாளர்கள் தங்களது சொந்த வாகனங்களில் முட்டைகளை ஏற்றிச் சென்றாலும், இங்கு தினசரி உற்பத்தியாகும் 3 கோடி முட்டைகளையும் ஏற்றி செல்வது என்பது முடியாத காரியம் ஆகும். எனவே மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மண்டலத்தின் முக்கியமான முட்டை விற்பனை ஸ்தலமாக கேரளா திகழ்ந்து வருகிறது. அங்கும் லாரிகள் வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. இதனால் முட்டைகளை அங்கு கொண்டு சென்று விற்பனைக்காக வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக பண்ணையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.