வறட்சியின் பிடியில் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம்


வறட்சியின் பிடியில் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம்
x
தினத்தந்தி 2 April 2017 2:15 AM IST (Updated: 1 April 2017 7:21 PM IST)
t-max-icont-min-icon

எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் வறட்சியின் பிடியில் சிக்கி வறண்டு கிடக்கிறது.

ஓட்டப்பிடாரம்,

எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம் வறட்சியின் பிடியில் சிக்கி வறண்டு கிடக்கிறது.

எப்போதும்வென்றான் நீர்த்தேக்கம்

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கயத்தார், கழுகுமலை, கடம்பூர் ஆகிய பகுதிகளில் பெய்த மழை நீர் எப்பொதும்வென்றான், ஆதனூர் வழியாக வேப்பலோடை அருகே கடலில் கலக்கிறது. மழை நீர் கடலில் வீணாக செல்வதை தடுக்க வேண்டும் என்று எப்போதும்வென்றான் கிராம பொது மக்கள் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பல போராட்டங்ள் மூலம் வறண்ட ஓட்டப்பிடாரம் பகுதியை வளமாக்கும் வகையிலும் மழை நீரை தேக்கி வைக்கும் வகையிலும் தமிழக அரசு கடந்த 30–6–1976–ம் ஆண்டு எப்போதும்வென்றான் நீர்த்தேக்கத்தை அமைத்தது. இதனால் கடலுக்கு சென்ற நீர் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த நீர்த்தேக்கம் மூலம் எப்போதும்வென்றான், காட்டுநாயக்கன்பட்டி, ஆதனூர், ஆகிய கிராமங்களை சேர்ந்த 837.78 எக்டர் பரப்பு நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணை 3 மீட்டர் உயரம் கொண்டது. 120 மில்லியன் கன அடி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி 465.93 ஏக்கர் ஆகும்.

37 ஆண்டுகளுக்கு...

இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் தண்ணீரால் நிரம்பி வழிந்தது. அப்போது காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மணலும் நீர்த்தேக்கத்தில் தொடர்ந்து தேங்கி கொண்டே இருந்தது. இதனால் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு குறைந்து உள்ளது. இந்த நீர்த்தேக்கம் தூர்வாரப்படாததால் நீர்த்தேக்கத்தில் கரிசல் மண் திட்டுகள் அமைந்து உள்ளன. தற்போது 55 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேக்க முடிகிறது. இந்த தண்ணீர் விவசாயத்துக்கு போதுமானதாக இல்லை.

கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ந்து தண்ணீரால் நிரம்பி வழிந்த நீர்த்தேக்கம் கடந்த 2014–ம் ஆண்டு முதன் முறையாக தண்ணீர் கிடைக்காமல் தவிக்க தொடங்கியது. தற்போது 2–வது முறையாக 2016–ம் ஆண்டு பருவமழை பொய்த்ததால் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் வறண்டு கிடக்கிறது. இதனால் அந்த பகுதி வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

கடந்த 2014–ம் ஆண்டு எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் தூர்வார வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை ஓங்கி ஒலிக்க தொடங்கியது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்திய, மாநில ஆய்வு குழுக்கள் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்தை தூர்வார அறிவுறுத்தியது. அதன்படி ரூ.20 கோடி நிதி ஒதுக்கி தூர்வாரும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்த தூர்வாரும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

தூர்வார வேண்டும்

இந்த நிலையில் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் வறண்டு கிடப்பதால் அந்த பகுதியில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. ஆகையால் நீர்த்தேக்கத்தை தூர்வாரி அதிக அளவில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story