தூத்துக்குடியில் அரிய வகை ஆமைகள் மீட்பு
தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் கடல் ஆமைகளை சிலர் பிடித்து பதுக்கி வைத்து இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்திற்கு பின்புறத்தில் கடல் ஆமைகளை சிலர் பிடித்து பதுக்கி வைத்து இருப்பதாக தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு 2 ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த ஆமைகளை வனத்துறையினர் கைப்பற்றினர்.
பின்னர் அந்த ஆமைகள் தூத்துக்குடி தெர்மல் நகர் பீச் கடற்கரை பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கடலில் விடப்பட்டன. இந்த ஆமைகள் 2–ம் ஆலிவ் எனப்படும் அரியவகை இனத்தை சேர்ந்தவையாகும். இதில் ஒரு ஆமை சுமார் 10 கிலோவும், மற்றொரு ஆமை 15 கிலோவும் இருந்தது. அரிய வகை இனத்தை சேர்ந்த இந்த ஆமைகளை இறைச்சிக்காக நேற்று முன்தினம் இரவு கடலில் இருந்து பிடித்து இருக்கலாம் என்று கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர்.