வேலூர் அருகே விபத்தில் சிக்கினார் மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரின் இதயம் ஹெலிகாப்டரில் சென்னை வந்தது
விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரின் இதயம் வேலூரில் இருந்து சென்னைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டது.
வேலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சந்திரபோஸ் என்பவருடைய மகன் கிருபாகரன் (வயது 22). டிப்ளமோ சிவில் என்ஜினீயரான இவர், புதுச்சேரியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இவருடைய தம்பி விக்னேஸ்வரன் (18), இவரும் புதுச்சேரியில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.
விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அண்ணன், தம்பி இருவரும் கடந்த 29–ந் தேதி மோட்டார் சைக்கிளில் புதுச்சேரிக்கு புறப்பட்டனர். கிருபாகரன் மோட்டார் சைக்கிளை ஓட்ட விக்னேஸ்வரன் பின்னால் அமர்ந்திருந்தார். ஆரணி அருகே சென்றபோது எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
உடல் உறுப்புகள் தானம்தலையில் பலத்த காயமடைந்த கிருபாகரன் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையிலும், லேசான காயமடைந்த விக்னேஸ்வரன் வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். கிருபாகரன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மூளைச்சாவு அடைந்தார். அதைத்தொடர்ந்து அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.
கிருபாகரனின் இதயம், கண், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவை தானமாக வழங்கப்பட்டன. சென்னை மலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு கிருபாகரனின் இதயத்தை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
ஹெலிகாப்டரில் வந்ததுசி.எம்.சி. ஆஸ்பத்திரியில் இருந்து இதயம் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று பகல் 3.40 மணிக்கு வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள ஹெலிபேடில் தயாராக நிறுத்தப்பட்டு இருந்த ஹெலிகாப்டரில் இதயம் ஏற்றப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.