திருவண்ணாமலையில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா கலெக்டர் தலைமையில் நடந்தது
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவு நுகர்வோர் மற்றும் பொது வினியோக திட்டத்தின்கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திருவண்ணாமலை, போளூரை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,627 ரேஷன் கடைகள் உள்ளன. புதிய ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்க ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி 90 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளது. ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்க நடைமுறையில் உள்ள 6 லட்சத்து 30 ஆயிரத்து 657 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளன.
எஸ்.எம்.எஸ்.முதல் கட்டமாக திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய 2 தாலுகாவை சேர்ந்த 23 ஆயிரத்து 667 ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று (நேற்று) ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. படிப்படியாக அனைவருக்கும் வழங்கப்படும். தங்களது ரேஷன் அட்டையில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) வரும்.
குறுஞ்செய்தி வந்த 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு தங்களது குறுஞ்செய்தி வந்த செல்போனை கொண்டு சென்று ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளலாம். பழைய ரேஷன் அட்டையில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு பெற்றுக் கொண்டதற்கான ரப்பர் ‘ஸ்டாம்ப்’ குத்தப்படும். மேலும், தங்களுக்கு வரப்பெற்ற குறுஞ்செய்தியில் உள்ள ஓ.டி.பி. எண்ணை (பாஸ்வேர்டு) விற்பனையாளரிடம் காண்பித்து பி.ஓ.எஸ். கருவியில் (பாயிண்ட் ஆப் சேல்ஸ்) பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புதிய ஆன்லைன் சேவை அறிமுகம்உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை புதிய ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை வழங்கீட்டளவு விவரங்கள், ரேஷன் அட்டை புதிதாக பெற, முகவரி மாற்றம் செய்ய, புதிய பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள, புகார்கள் தெரிவிக்க, இருப்பு விவரங்கள் போன்ற சேவைகள் அதில் இருக்கும்.
இதுகுறித்து அருகில் உள்ள இ–சேவை மையம் மூலமாகவும், www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம். வாங்காத பொருட்களுக்கு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்தால் புகார் செய்யலாம். தற்போது அரிசியுடன் ஒரு பகுதியாக கோதுமையும், நகர்புறங்களில் 10 கிலோவும், கிராமப்புறங்களில் 5 கிலோ வரையும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். கோதுமை வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்செல்வன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.