திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் குழந்தை வீச்சு பிறந்த 7 நாளில் விட்டுச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பெண் குழந்தை வீச்சு பிறந்த 7 நாளில் விட்டுச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்?
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 1 April 2017 8:48 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பிறந்த 7 நாளில் பெண் குழந்தை

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். நேற்று காலையில் பணியாளர்கள் கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள வளாகத்தில் இருந்து குழந்தையின் அழுகை சதம் கேட்டுள்ளது. உடனே பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது, பெண் குழந்தை ஒன்று அனாதையாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோவில் அதிகாரிகளுக்கும், கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் குழந்தையின் அருகே தமிழக அரசால் வழங்கப்படும் அம்மா பரிசு பெட்டகம் இருந்துள்ளது. எனவே, இந்த குழந்தை அரசு மருத்துவமனையில் பிறந்திருக்கலாம் என்று போலீசார் கூறினர்.

பிறந்து 7 நாட்களான...

இதனையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர்கள் குழந்தையின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்ததில், குழந்தை பிறந்து 7 நாட்கள் தான் ஆகி உள்ளது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் குழந்தையை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கோவிலில் பாதுகாப்பு வசதிக்காக கோவில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தையை வீசிவிட்டு சென்றவர்களின் உருவம் அதில் பதிவாகி இருக்கலாம் என்ற அடிப்படையில், திருவண்ணாமலை டவுன் போலீசாரும், மகளிர் போலீசாரும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குழந்தையை வீசிவிட்டு சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்பது குறித்தும், குழந்தை கடத்தப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story