சின்னசேலம் செல்வமுருகன் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சின்னசேலம் செல்வமுருகன் கோவிலில் பங்குனி உத்திரபெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
சின்னசேலம்,
சின்னசேலம் விஜயபுரத்தில் பிரசித்தி பெற்ற செல்வமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்கினி உத்திர பெருவிழாவுக்கான கொடியேற்று விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து மாலை 6 மணிக்கு மேள, தாளம் முழங்க கோவில் கொடி மரத்தில் விழா கொடியேற்றப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சாமி வீதி உலா நடைபெற்றது. இதில் செங்குந்தர் மகாஜன சங்க தலைவர் அன்பழகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 9–ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் தினந்தோறும் வெவ்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.