டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இலை, தழைகளை சுற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இலை, தழைகளை சுற்றிக்கொண்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 April 2017 4:45 AM IST (Updated: 1 April 2017 10:18 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஜனநாயக வாலிபர்

சேலம்,

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது, வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 19–வது நாளாக நீடித்தது.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விவசாயிகளுக்கு ஆதரவாக, நேற்று சேலம் தலைமை தபால் நிலையம் அருகில் இலை, தழைகளை உடம்பில் சுற்றிக்கொண்டு ஆதிவாசிகள்போல வேடமணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர் பிரவீன்குமார், பொருளாளர் வெங்கடேஷ், துணைத்தலைவர் கே.வெங்கடேஷ், துணை செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் தொடர்ச்சியாக போராடும் விவசாயிகளின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் புரிந்து கொண்டு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். இல்லையெனில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவோம் என தெரிவித்தனர்.


Next Story