ஈரோடு மாவட்டத்தில் 3–வது நாளாக லாரிகள் ஓடவில்லை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கடந்த 30–ந் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
ஈரோடு,
வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு உயர்த்தியதற்கும், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை போக்குவரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டு இருப்பதற்கும் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்டு உள்ள வாட் வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கடந்த 30–ந் தேதி முதல் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 3–வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் நேற்று ஓடவில்லை. இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வி.கே.ராஜமாணிக்கம் கூறும்போது, ‘லாரிகள் ஓடாததால் ஈரோட்டில் மட்டும் ரூ.15 கோடி மதிப்புள்ள மஞ்சள் தேக்கம் அடைந்து உள்ளது. இதுபோல் ஜவுளி ஏற்றுமதி முழுமையாக தடைப்பட்டு உள்ளது. மற்ற பொருட்களும் இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படவில்லை. இதனால் சுமார் ரூ.35 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளன. ரூ.70 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது’ என்றார்.