விரிவான விசைத்தறி மேம்பாட்டு திட்டம் காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்


விரிவான விசைத்தறி மேம்பாட்டு திட்டம் காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 April 2017 4:45 AM IST (Updated: 1 April 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் விரிவான விசைத்தறி மேம்பாட்டு திட்டத்தை காணொலி காட்சி மூலம் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தொடங்கி வைத்தார்.

ஈரோடு,

இந்திய அரசின் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் விசைத்தறி மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’’ என்ற விரிவான விசைத்தறி மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மராட்டிய மாநிலம் பிவண்டி நகரில் நடந்தது. இதுபோல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’’ திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஜவுளி தலைநகரமாக திகழும் ஈரோட்டில் ஈரோடு –கோவை மையங்களுக்கான ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’’ விரிவான விசைத்தறி மேம்பாட்டு திட்ட தொடக்க விழா நடந்தது.

ஈரோட்டில் நடந்த விழாவுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் புஷ்பா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், எஸ்.செல்வகுமார சின்னையன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

ஈரோடு மற்றும் பிவண்டியில் நடந்த விழாக்கள் காணொலி காட்சி மூலம் இணைக்கப்பட்டு இருந்தது. எனவே பிவண்டியில் இருந்து கொண்டு ஈரோட்டில் ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’’ திட்டத்தை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதுபோல் திட்ட கையேட்டினை வெளியிட்ட போது, ஈரோட்டிலும் கூடுதல் செயலாளர் புஷ்பா சுப்பிரமணியம் கையேட்டினை வெளியிட்டார்.

பின்னர் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, ஈரோடு எம்.பி. செல்வகுமாரசின்னையனிடம் காணொலி காட்சி வழியாக பேசினார். அப்போது ஈரோட்டை தேர்ந்து எடுத்து ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’’திட்டம் தொடங்கி வைத்ததற்கு எம்.பி. செல்வகுமார சின்னையன் நன்றி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து பேசிய மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, ‘‘தமிழ்நாட்டில் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’’ திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள நெசவாளர்கள் மிகச்சிறப்பாக பணியாற்றி, ஜவுளி உற்பத்தியில் சிறந்து விளங்குகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

மானியம்

அதைத்தொடர்ந்து ஈரோடு விழா நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கூடுதல் செயலாளர் புஷ்பா சுப்பிரமணியம் பேசியதாவது:–

இன்று ஜவுளித்துறையில் மிக முக்கியமான நாளாகும். ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’’ திட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுக்கும். ஜவுளித்துறை அமைச்சகம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தெரிந்து உள்ளது. எனவேதான் உற்பத்தியாளர்களுக்கு முழுமையான பயன் கிடைக்கும் வகையில் ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’’திட்டம் அமைந்து உள்ளது. ஈரோடு மற்றும் கோவை ஜவுளி மையங்கள் அனைத்து புதிய தொழில் நுட்பத்தையும் உடனடியாக செயல்படுத்தி பார்ப்பதில் முன்னோடிகளாக இருக்கிறீர்கள். பருத்தி ஜவுளி உற்பத்தியில் ஈரோடு, கோவை பகுதி இந்திய அளவில் தலைசிறந்து விளங்குகிறது.

புதிய கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரித்து வருகிறீர்கள். குறிப்பாக பல்லடத்தில் தான் முதன் முதலில் சூரிய சக்தியை பயன்படுத்தி விசைத்தறி ஓட்டும் திட்டத்தை ஒருவர் தொடங்கினார். அதை மற்றவர்களும் பின்பற்றி வருகிறார்கள். எனவே இந்த திட்டமும் உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். ‘‘பவர் டெக்ஸ் இந்தியா’’ திட்டத்தில் 50 சதவீதம் வரை மானியம் கிடைக்கிறது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 90 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதுபோன்று ஏராளமான திட்டங்கள் உள்ளன.

இவ்வாறு மத்திய ஜவுளித்துறை கூடுதல் செயலாளர் புஷ்பா சுப்பிரமணியம் பேசினார்.

உற்பத்தி இலக்கு

ஜவுளித்துறை பொது துணை இயக்குனர் ஓ.எம்.பிரபாகரன், பெடக்சில் முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் பேசினார்கள்.

முன்னதாக கோவை மண்டல ஜவுளி ஆணையாளர் அலுவலக உதவி இயக்குனர் ஜி.குமாரவேல் வரவேற்றார். முடிவில் ஈரோடு விசைத்தறி சேவை மையத்தின் உதவி இயக்குனர் எம்.ஆர்.சுதாராணி நன்றி கூறினார்.

முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கூடுதல் செயலாளர் புஷ்பா சுப்பிரமணியம் கூறும்போது, ‘‘உலக அளவில் ஜவுளி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 5 சதவீதமாக உள்ளது. இது உலக அளவில் 2–வது இடமாகும். தொடர்ந்து இந்த இடத்தை நாம் தக்கவைத்து இருக்கிறோம். அடுத்த ஆண்டு உற்பத்தி இலக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நூல் விலை உயர்வு தொடர்பான பிரச்சினை கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.


Next Story