தொலைக்காட்சி நிருபர்கள் என்று கூறி சாயப்பட்டறையில் பணம் பறிக்க முயன்ற என்ஜினீயர்கள் கைது


தொலைக்காட்சி நிருபர்கள் என்று கூறி சாயப்பட்டறையில் பணம் பறிக்க முயன்ற என்ஜினீயர்கள் கைது
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 1 April 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

தொலைக்காட்சி நிருபர்கள் என்று கூறி ஈரோடு சாயப்பட்டறையில் பணம் பறிக்க முயன்ற என்ஜினீயர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

ஈரோடு பெரிய சேமூர் சீனாக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 54). இவர் அந்த பகுதியில் சாய மற்றும் சலவை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய பட்டறைக்கு நேற்று காலை வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தமிழகத்தில் பிரபலமான ஒரு செய்தி தொலைக்காட்சியின் நிருபர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டனர். எனவே தங்கராஜ், அவர்களை பட்டறைக்குள் அனுமதித்தார்.

உள்ளே சென்ற அவர்கள் குறிப்பிட்ட தொலைக்காட்சியில் சுற்றுச்சூழல் தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், இதற்காக சாய மற்றும் சலவைப்பட்டறைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யும் முறையை பார்வையிட வேண்டும் என்றும் கூறினார்கள். அதை நம்பிய தங்கராஜ், அவர்களை பட்டறையின் அனைத்து பகுதிகளுக்கும் அழைத்துச்சென்றார். அவற்றை முழுமையாக பார்வையிட்டு 2 பேரும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டல்

பின்னர் பட்டறையில் இருந்து கழிவுகள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நீர் நிலைகள் கெட்டு வருகின்றன. இதுபற்றி நாங்கள் செய்தி வெளியிடப்போகிறோம் என்று 2 பேரும் கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கராஜிடம் ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் செய்தி போடாமல் தவிர்த்து விடுவோம். இல்லை என்றால் கண்டிப்பாக செய்தி போடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

நிருபர்கள் என்று கூறிய நபர்கள் செய்தி போடாமல் இருக்க பணம் வேண்டும் என்று கேட்டதால் தங்கராஜுக்கு சந்தேகம் வந்தது.

அதை வெளிக்காட்டாமல், அவர்களை அலுவலகத்தில் உட்கார வைத்து விட்டு வெளியே வந்த அவர், அருகில் உள்ள இன்னொரு சலவைப்பட்டறை உரிமையாளருக்கு போனில் தகவல் தெரிவித்தார். அப்போது எதிர் முனையில் பேசிய சலவைப்பட்டறை உரிமையாளர் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு 2 பேர், அவரையும் மிரட்டி பணம் பறித்துச்சென்றதை கூறினார். எனவே அவர்களை அங்கேயே உட்கார வைக்கும்படி கூறிய அவர், உடனடியாக வருவதாக கூறினார்.

போலி நிருபர்கள்

இந்த தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியதால் அருகில் உள்ள சாய–சலவைப்பட்டறை உரிமையாளர்கள் பலரும் தங்கராஜின் பட்டறைக்கு வந்தனர். அப்போது நிருபர்கள் என்ற பெயரில் வந்த 2 பேரும் ஏற்கனவே சில இடங்களில் பணம் பறித்து மோசடி செய்து இருந்தது தெரியவந்தது.

எனவே 2 பேரையும் பிடித்து மாறி மாறி விசாரித்தனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிருபர்களையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தியபோது ஏற்கனவே வந்தவர்கள் 2 பேரும் போலி நிருபர்கள் என்பது தெரியவந்தது.

உடனடியாக சாயப்பட்டறை உரிமையாளர்கள், அவர்கள் 2 பேரையும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்–இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் போலீசார் போலி நிருபர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.

என்ஜினீயர்கள்

அப்போது, பிடிபட்ட 2 பேரும் என்ஜினீயர்கள் என்பது தெரியவந்தது. மேலும் போலீஸ் விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு:–

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் சோரையன் வலவு பகுதியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருடைய மகன் லத்தீஷ் பழனியப்பன் (24). இவருடைய நண்பர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர்ரோடு காளியண்ணா நகர் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பவருடைய மகன் பிரபாகரன் (24). இவர்கள் 2 பேரும் சேலத்தில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பட்டம் பெற்று உள்ளனர். என்ஜினீயர்களான இவர்கள் 2 பேரும் போலியாக பிரபல தொலைக்காட்சியின் பெயரில் அடையாள அட்டையை தயார் செய்து தொழிற்சாலைகளுக்கு சென்று அவர்களைப்பற்றி தவறாக செய்தி வெளியிட்டு விடுவோம் என்று கூறி பணம் பறித்து வந்தனர். பல தொழிற்சாலைகளிலும் சட்டத்துக்கு புறம்பாக ஏதாவது விதிமுறை மீறல்கள் இருக்கும் என்பதால் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து வந்தனர். இதனால் இந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடிவெடுத்த அவர்கள் ஈரோட்டில் வந்து பணம் பறிக்க முயன்றபோது வசமாக மாட்டிக்கொண்டனர்.

இந்த விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

2 பேர் கைது

அவர்களிடம் இருந்து லத்தீஸ் பழனியப்பனின் படத்துடன் கூடிய போலி அடையாள அட்டை ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் ஹரீஸ்.எஸ். என்று போலியான பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் சகாதேவன் ஆகியோர் என்ஜினீயர்கள் லத்தீஷ் பழனியப்பன், பிரபாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களை ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு மலர் வாலண்டினா முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story