10 பவுன் நகைக்காக கொன்று புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் தோண்டியெடுப்பு
நாகர்கோவிலில் 10 பவுன் நகைக்காக பெண்ணை கொன்று, இட்டமொழி அருகே புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.
இட்டமொழி,
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள பாரதப்பள்ளி இடைக்கினாவிளை பகுதியைச் சேர்ந்தவர் இன்னசென்ட் (வயது 46). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (36). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சசிகலா சுய உதவிக்குழு, தொண்டு நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
கடந்த 25–ந் தேதி தன்னுடைய தோழி கலா என்பவரை பார்த்து விட்டு வருவதாக கணவரிடம் கூறிவிட்டு சசிகலா சென்றார். மாலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இன்னசென்ட் உறவினர்களுடன் சேர்ந்து சசிகலாவை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சசிகலா மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கணவன்– மனைவிசசிகலா பயன்படுத்திய செல்போன் எண்ணில் யார், யாரெல்லாம் பேசி இருக்கிறார்கள் என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கலாவிடம்தான் கடைசியாக சசிகலா பேசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் அருகே உள்ள இலுப்பையடி காலனியைச் சேர்ந்த கலாவையும், அவருடைய கணவர் ஆட்டோ டிரைவர் முருகேசனையும் பிடித்து விசாரித்தனர். இருவரும் முதலில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
கலாவும், அவருடைய கணவரும் விபசார கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் என்றும், எனவே சசிகலாவை விபசாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தியதில் சசிகலா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர். ஆனாலும் போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் கணவன்– மனைவி இருவரும் சசிகலாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதாவது சசிகலா அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை கேட்டதாகவும், அவர் தர மறுத்ததால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இட்டமொழி அருகே உடல் புதைப்புசசிகலாவின் உடலை வீட்டுக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதைத்தாகவும், போலீசார் சந்தேகப்பட்டதால் நெல்லை மாவட்டம் இட்டமொரி அருகே உள்ள சங்கனாங்குளம் பகுதியில் ஆட்டோவில் கொண்டு சென்று புதைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து திருவட்டார் போலீசார் ஆட்டோ டிரைவர் முருகேசன், அவருடைய மனைவி கலா ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து சசிகலா உடலை தோண்டி எடுக்க முடிவு செய்தனர். அதன்படி தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி (திருவட்டார்), மகாலிங்கம் (திசையன்விளை), தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் விஜயன் மற்றும் போலீசார் கங்கனாங்குளம் பகுதிக்கு கலாவையும், முருகேசனையும் அழைத்து வந்தனர்.
முதலில் எந்த இடத்தில் சசிகலா உடலை புதைத்தார்கள் என்பது கணவன்– மனைவி இருவருக்கும் தெரியவில்லை. பின்னர் சசிகலா உடல் புதைக்கப்பட்ட இடத்தின் அருகில் உள்ள ஒரு சுவரில் தடை செய்யப்பட்ட பகுதி என்று எழுதி இருந்ததாக முருகேசன் தெரிவித்தார். அதன்பிறகு ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை தளம் பகுதியில் போலீசார் அவர்களை அழைத்துச் சென்று காண்பித்தனர். அங்கு சாலையோரம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட ஒரு இடத்தில் சசிகலா உடல் புதைக்கப்பட்ட இடத்தை போலீசாரிடம் முருகேசன் காண்பித்தார்.
உடல் தோண்டி எடுப்புசசிகலா உடலை தோண்டு எடுக்க போலீசார் முடிவு செய்தனர். உடனே சம்பவ இடத்துக்கு நாங்குநேரி தாசில்தார் ஆதிநாராயணன், கிராம நிர்வாக அதிகாரிகள் ராம்குமார், சுடலைமுத்து மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சசிகலா உடல் தோண்டி எடுக்கப்பட்டு, நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பிறகு ஒரு டிரக்கரில் சசிகலா உடல் நாகர்கோவிலுக்கு கொண்டு சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.