கோவில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது கல்வீச்சு


கோவில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 2 April 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரம் இந்திரா காலனியில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தேனி,

தேனி அல்லிநகரம் இந்திரா காலனியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலின் திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 6–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில், கடந்த 29–ந்தேதி நள்ளிரவில் இந்த கோவில் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஒருதரப்பினர் போலீசில் புகார் செய்தனர். மேலும் அவர்கள், கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களை கைது செய்யக்கோரி பொம்மையகவுண்டன்பட்டியில் தேனி–பெரியகுளம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது, மறியலில் ஈடுபட்டவர்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தங்களை நோக்கி கற்கள் வீசப்பட்டதாகவும், கற்கள் வீசியவர்களை கைது செய்யக்கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story