உடுமலை பகுதியில் வறட்சி காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு
உடுமலை பகுதியில் வறட்சி காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
குடிமங்கலம்,
இந்தியாவில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக பட்டு வளர்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் அளவுக்கு பருவநிலை நிலவி வந்தது. வாழை, கரும்பு, தென்னை என பயிர்களை பயிரிட்டு வந்த விவசாயிகளின் ஆர்வம் பட்டு வளர்ப்புக்கு திரும்பியது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி நடவு செய்து பட்டுக்கூடு வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரக்கூடிய எம்.ஆர்.2 ரகம். அதிக மகசூல் கொடுக்கக்கூடிய வி 1 ரகம் மல்பெரி நடவு செய்யப்படுகிறது. உடுமலை பகுதியில் இளம்புழு வளர்ப்பு மையத்தின் மூலம் புழுக்களை வாங்கி பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். மல்பெரி இலை புழுக்களுக்கு உணவாக கொடுக்கப்படுகிறது. புழுக்கள் 25 நாட்களில் பட்டுக்கூடுகளாக உருமாறுகிறது.
பாதிப்புபட்டுக்கூடு உற்பத்தி குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது ‘‘ உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் வெண்பட்டு கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டுக்கூடு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதன் விளைவாக ஒரு ஏக்கருக்கு 800 கிலோ முதல் 900 கிலோ வரை பட்டுக்கூடு மகசூல் அதிகரித்தது. ஆனால் தற்போது வறட்சியின் காரணமாக புழுக்களுக்கு தேவையான மல்பெரி இலைகள் கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டுக்கு 10 முறை பட்டுக்கூடு உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு வறட்சியின் காரணமாக உற்பத்தி பாதி யாக குறைந்து பாதிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ஆயிரத்து 500 கிலோ வரை பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தற்போது 500 முதல் 800 கிலோ வரை பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் கர்நாடக மாநிலம் ராம்நகர் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. தரமான வெண்பட்டுக்கூடுகள் ஒரு கிலோவுக்கு ரூ.600 வரை விற்பனை செய்யப்படுகிறது. உடுமலை பகுதியில் பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைத்த போதிலும், வறட்சி காரணமாக உற்பத்தி குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பலன் இல்லை’’ என்று கூறினர்.