திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 55,915 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டுகள்’
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 55,915 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்படுகின்றன.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பழைய ரேஷன்கார்டுகள் மாற்றி கொடுக்கப்படாமல் இருந்தது. எனினும், ஆண்டு தோறும் உள்தாள் மட்டும் இணைத்து கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ரேஷன்கார்டுகளுக்கு பதிலாக ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆதார் எண், செல்போன் எண் ஆகியவை சேகரிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நேற்று முதல் மாநிலம் முழுவதும் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கும் பணி தொடங்கியது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 250 குடும்பங்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்பட இருக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் பொன்சீனிவாசநகர் ரேஷன்கடையில் நடந்தது.
முதல் கட்டமாக...இதில் தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்மார்ட்கார்டுகளை வழங்கினர். பின்னர் இதுகுறித்து கலெக்டர் டி.ஜி.வினய் கூறியதாவது:–
பொதுவினியோக திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும். திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல்கட்டமாக 55,915 ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வந்துள்ளன. தொடர்ந்து அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும், ‘ஸ்மார்ட் கார்டுகள்’ வழங்கப்படும். இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் ரேஷன்கடை விற்பனையாளர், மாவட்ட வழங்கல் அதிகாரியை அணுகி சரிசெய்து கொள்ளலாம்.
செல்போன் எண் பதிவுஏற்கனவே ரேஷன்கார்டுதாரர்களிடம் ஆதார் எண், செல்போன் எண் பெறப்பட்டு ரேஷன்கடை எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் ‘ஸ்மார்ட் கார்டுகள்’ அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதுவரை செல்போன் எண்களை பதிவு செய்யாதவர்கள் ரேஷன்கடைக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அதேபோல் செல்போன் எண்ணை தவறாக பதிவு செய்தவர்கள், அதை மாற்றம் செய்ய வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷாஅஜித், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பழனிவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜான்சன் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.