ஊட்டி படகு இல்லம் அருகே பயங்கர காட்டுத்தீ
ஊட்டி படகு இல்லம் அருகில் தனியார் வனப்பகுதியில் நேற்று மதியம் திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்யாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் வனப்பகுதிகளில் புற்கள் மற்றும் புதர்செடிகள் கருகின. ஊட்டியில் கடந்த சில நாட்களாக சமவெளிக்கு இணையாக வெயில் சுட்டெரிக்கிறது. இதன்காரணமாக காட்டுத்தீ ஒரு சில இடங்களில் ஏற்பட்டு வருகிறது. ஊட்டி படகு இல்லம் அருகில் தனியார் காடுகள் உள்ளன. இதில் ஏராளமான புதர்செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த புதர்செடிகள் வறட்சியால் கருகி உள்ளது.
பற்றி எரிந்த காட்டுத்தீஇந்த நிலையில் நேற்று மதியம் திடீரென்று படகு இல்ல சாலையோரம் திடீர் என காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் மளமளவென்று அருகில் இருந்த தனியார் வனப்பகுதிக்கும் காட்டுத்தீ பரவியது. தனியார் வனப்பகுதியில் கற்பூர மரங்களின் இலைகள் அதிகளவு காணப்பட்டதாலும், கருகிய புதர்செடிகளினாலும் மளமளவென்று காட்டுத்தீ பயங்கரமாக பற்றி எரிந்தது. இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் 2 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கர பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் காட்டுத்தீயை அணைத்தனர்.