புனலூர்–இடமண் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது


புனலூர்–இடமண் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 2 April 2017 4:00 AM IST (Updated: 2 April 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

புனலூர்– இடமண் இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்ததையொட்டி, 7 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது.

கொல்லம்,

கொல்லம் மாவட்டம் புனலூர் முதல் செங்கோட்டை வரை மீட்டர்கேஜ் ரெயில்பாதையாக இருந்தது. இதனை அகல ரெயில்பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து பல கோடி ரூபாய் செலவில் அலக ரெயில்பாதை அமைக்கும் பணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

இதற்காக மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட அனைத்து பயணிகள் ரெயில்களும் நிறுத்தப்பட்டன. அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தற்போது நிறைவு அடைந்ததால் புனலூர்– இடமண் இடையே நேற்று முன்தினம் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

போக்குவரத்து தொடங்கியது

காலை 10.20 மணிக்கு புனலூர் நகராட்சி தலைவர் எம்.ஏ. ராஜகோபால் கொடியை அசைத்து புனலூர்– இடமண் பயணிகள் ரெயில் சேவையினை தொடங்கி வைத்தார். இந்த வழித்தடத்தில் மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்குவதையொட்டி, புனலூர் ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூடி இருந்தனர்.

கொல்லம்– புனலூர் இடையேயான பயணிகள் ரெயிலும், குருவாயூர்– புனலூர் ரெயிலும் தற்போது இடமண் வரை நீட்டிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. புனலூர்–இடமண் கட்டணம் ரூ.10 ஆகும். இடமண்– நீயூ ஆரியங்காவு இடையேயான அகல ரெயில் பாதை அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் இன்னும் சில மாதங்களில் நிறைவு பெற்று செங்கோட்டை–கொல்லம் இடையே மீண்டும் பயணிகள் ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

புனலூரில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரெயிலுக்கு இடமண் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story