கோவை அருகே சேற்றில் சிக்கிய பெண் யானை மீட்பு
கோவை அருகே சேற்றில் சிக்கிய பெண் யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். சிகிச்சைக்கு பின்னர் அது வனப்பகுதிக்குள் சென்றது.
கோவை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மலைக்கிராமமான குஞ்சூர்பதி அருகில் ஒரு குட்டை உள்ளது. இந்த குட்டையில் மலையடிவாரத்தில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகள், மான்கள், காட்டுயானைகள் தண்ணீர் குடிக்க வருவது வழக்கம்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் குட்டியானையுடன் 2 பெண் யானைகள் குட்டைக்கு தண்ணீர் குடிக்க வந்தன. அப்போது அதில் ஒரு பெண் யானை, குட்டையில் உள்ள சேற்றில் சிக்கி கொண்டது. அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்த அந்த யானையும், உடன் வந்த குட்டியானை மற்றும் மற்றொரு பெண் யானையும் பயங்கரமாக பிளிறின.
பாசப்போராட்டம்நேற்று காலை காட்டுயானைகளின் பிளிறல் சத்தம் கேட்டு குஞ்சூர்பதி கிராம மக்கள் அப்பகுதிக்கு வந்தனர். காட்டுயானை சேற்றில் சிக்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சேற்றில் சிக்கிய காட்டுயானையின் அருகில், குட்டியானை பாசப்போராட்டம் நடத்தி கொண்டிருந்தது. மேலும் அதற்கு பாதுகாப்பாக மற்றொரு பெண் யானையும் நின்றிருந்தது. இதனால் வனத்துறையினரால் சேற்றில் சிக்கிய காட்டுயானையை நெருங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
யானை மீட்புஇதையடுத்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து, குட்டியானையையும், அருகே நின்றிருந்த பெண் யானையையும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனாலும் அந்த யானைகள் கொஞ்ச தூரம் ஓடி வனப்பகுதியிலேயே நின்றிருந்தன. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, அதில் கயிறு கட்டி சேற்றில் சிக்கிய காட்டுயானையை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர்.
சேற்றில் நீண்ட நேரம் சிக்கி தவித்ததால் சோர்வில் இருந்த அந்த யானை எழுந்து நிற்க முடியாமல் கீழே படுத்து கிடந்தது. இதையடுத்து அந்த காட்டுயானைக்கு தண்ணீரும், பழங்களும் கொடுக்கப்பட்டன. மேலும் கால்நடை டாக்டர்கள் குழுவினர் குளுக்கோஸ் உள்ளிட்ட மருந்துகளை ஊசி மூலம் யானையின் உடலில் செலுத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு பின்னர், அந்த காட்டுயானை புத்துணர்வு பெற்று எழுந்து நின்றது.
பின்னர் அந்த யானை வனப்பகுதியை நோக்கி சென்றது. இதை பார்த்ததும் குட்டி யானை ஓடி வந்து அந்த தாய் யானை அருகே நின்றது. அதை தாய் யானை துதிக்கையால் தடவி கொடுத்தது. பின்னர் 2 யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன.