மதுரை நகரில் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 3,310 பேரிடம் அபராதம் வசூல்
மதுரை நகரில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர
மதுரை,
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் தலைக்கவசம் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதித்து வந்தனர். அப்போது மதுரை நகரில் 90 சதவீதம் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து சென்றனர். அது நாளடைவில் குறையத் தொடங்கி, தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிவதில்லை. கடந்த ஆண்டு மட்டும் மதுரை மாநகரில் விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 225 ஆகும்.
இதில் இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகம் ஆகும். அதில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாதவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் தலைக்கவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் மீது 1 லட்சத்து 34 ஆயிரத்து 954 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்று முதல் மதுரை நகரில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று திடீரென மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
3,310 பேருக்கு அபராதம்அதைத்தொடர்ந்து மதுரை நகரில் நேற்று போக்குவரத்து, சட்டம்–ஒழுங்கு போலீசார் இணைந்து 120 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரே நாளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற 3 ஆயிரத்து 310 பேருக்கு 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.3 லட்சத்து 31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் ஓட்டுனர் உரிமம் ரத்து உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் பாபு கூறியதாவது:–
வீட்டு முகவரி தர வேண்டும்அபராதம் விதிப்பது எங்களுடைய நோக்கம் அல்ல. இரு சக்கர வாகனங்களின் செல்பவர்கள் தங்களது குடும்பத்தினரை மனதில் கொண்டு கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அவசர வேலையாக செல்வோர், தங்களிடம் அபராத தொகை இல்லை என கூறினால், அவரது செல்போன் நம்பர், வீட்டு முகவரி போன்றவற்றை வாங்கி கொண்டு விரைவில் வந்து அபராதம் கட்ட அறிவுறுத்துகிறோம். அவ்வாறு அவர்கள் வரவில்லை என்றால் வீட்டு முகவரிக்கு நோட்டீசு அனுப்பப்படும். டாக்டர், போலீசார், அரசு அதிகாரிகள் என தலைக்கவசம் அணியாமல் சென்ற அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.