தஞ்சை மாவட்டத்தில் 124 மதுக்கடைகள் மூடப்பட்டன


தஞ்சை மாவட்டத்தில் 124 மதுக்கடைகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 2 April 2017 2:09 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் 124 மதுக்கடைகள் மூடப்பட்டன.

தஞ்சாவூர்,

நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் அருகில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 400 மதுக்கடைகள் நேற்று மூடப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலும் மத்திய, மாநில நெடுஞ்சாலைகள் அருகில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மதுக்கடைகள், ரெயில் நிலையம், மருத்துவகல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மதுக்கடைகளும் மூடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் நேற்று 124 கடைகள் மூடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 214 மதுக்கடைகள் இயங்கி வந்தன.

அதிர்ச்சி

இதில் தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அப்போது தஞ்சை மாவட்டத்தில் 7 கடைகள் மூடப்பட்டன. அதன் பின்னர் 2-வதாக 500 கடைகள் மூடப்பட்ட போது தஞ்சை மாவட்டத்தில் 28 கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து 179 கடைகள் இயங்கி வந்தன. இந்த நிலையில் மேலும் 124 கடைகள் மூடப்பட்டதையடுத்து தற்போது தஞ்சை மாவட்டத்தில் 55 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கல்லணை- காவிரிபூம்பட்டினம் சாலை அருகில் இருந்த திருக்காட்டுப்பள்ளி, திருச்சினம்பூண்டி ஆகிய ஊர்களில் இருந்த 2 மதுக்கடைகள் மூடப்பட்டன. பூதலூர் ரெயில் நிலையம் அருகில் இருந்த ஒரு மதுக்கடை, செங்கிப்பட்டியில் இருந்த 2 மதுக்கடைகள், புதுக்குடியில் இருந்த ஒரு மதுக்கடை என மொத்தம் 6 மதுக்கடைகள் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மூடப்பட்டன.

நேற்று மதியம் 12 மணியளவில் மதுபான பிரியர்கள் மதுபானக்கடைகளுக்கு வந்தனர். ஆனால் கடைகள் பூட்டி இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்்தனர். சிலர் வெகுநேரமாக கடை திறப்பார்கள் என கடை முன்பு காத்திருந்தனர். பின்னர் கடை மூடப்பட்ட தகவல் அறிந்ததும் மதுப்பிரியர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர். மதுபான கடைகள் அமைந்திருந்த பகுதியில் பிற்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று சாலை அருகில் இருந்த கடைகள் மூடப்பட்டதால் அந்த பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மூடப்பட்ட கடைகளுக்கு பதில் அதிகாரிகள் மாற்று இடத்தில் கடைகளை அமைப்பதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.


Next Story