திட்டச்சேரி அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது


திட்டச்சேரி அருகே சாராயம் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2017 2:10 AM IST (Updated: 2 April 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

திட்டச்சேரி அருகே சாராயம் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் புதுச்சேரி சாராயம் கடத்தப்படுவதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்பேரிலும், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் அறிவுறுத்தலின்படியும், திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி மற்றும் போலீசார் திருமருகல் ஒன்றியம் சேஷமூலை சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை மேற்கொண்டனர். இதில் மோட்டார் சைக்கிளில் 5 லிட்டர் புதுச்சேரி சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

2 பேர் கைது

இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கும்பகோணம் ஆறுபடைவீடு பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் ஜெயசிம்மன் (வயது24) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெயசிம்மனை கைது செய்து, அவரிடம் இருந்த சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அதேபோல் இடையாத்தங்குடி பாலம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்ததில், மானாம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் மாதவன் (23) என்பவர் 5 லிட்டர் புதுச்சேரி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து மாதவனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 

Next Story