வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு


வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு
x
தினத்தந்தி 2 April 2017 4:00 AM IST (Updated: 2 April 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் நாளை(திங்கட்கிழமை) கடையடைப்பு நடைபெறுகிறது என்று மாநில துணை பொதுச்செயலாளர் வேதைமுருகையன் கூறினார்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டைக்கு நேற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணை பொதுச்செயலாளர் வேதை முருகையன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தங்கள் வாழ்வுரிமையை மீட்பதற்காக டெல்லியில் 19-வது நாளாக போராடும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் அவர்களின் நிலையை இன்று போராட்டம் மூலம் உலகமறிய செய்து வருகின்றனர். இதனைகண்டு அனைத்து கட்சியினரும் இந்திய மக்களும் கொதித்து எழுந்து வருகின்றனர். இதற்கு கொஞ்சம்கூட மத்திய அரசு இறக்கம் காட்டாமல் வருவது வேதனையை தருகிறது. உத்தரப்பிரதேசம் விவசாயிகளுக்கு ரூ.86 கோடி கடன் தொகையையும் ரத்து செய்யும் நிலையில், மத்திய அரசு தமிழக சிறு,குறு விவசாயிகளின் ரூ.8 ஆயிரம் கோடி கடன் தொகையையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி தீர்ப்பாயம் இறுதி தீர்ப்பை ரத்து செய்யும் முயற்சியை மேற்கொள்ள கூடாது. தமிழக விளைநிலங்களில் எரிவாயு எடுக்க நினைக்கும் என்னத்தை கைவிட வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டல அறிவிக்க வேண்டும்.

கடையடைப்பு

எனவே டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை (திங்கட்கிழமை) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் தமிழக முழுவதும் முழு கடையடைப்பு நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் 60 லட்சம் கடைகள் அடைக்கப்படும். இதில் டெல்டா மாவட்டமான தஞ்சை, நாகை திருவாரூர் மாவட்டங்களில் கிராமத்தில் உள்ள சிறு வணிகர்கள் கூட கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கு பெறுவார்கள். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நாகை மாவட்ட செயலாளர் ராமஜெயம், முத்துப்பேட்டை வர்த்தக கழக தலைவர் ராஜாராமன், பொதுச்செயலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story