ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 April 2017 4:15 AM IST (Updated: 2 April 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை கலெக்டர் சரவணவேல்ராஜ் தொடங்கி வைத்தார்.

அரியலூர்,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பழைய ரேஷன் கார்டுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு (மின்னணு குடும்ப அட்டை) வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் அரியலூரில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கி இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

2 லட்சத்து 10 ஆயிரத்து 666 ரேஷன் கார்டுகள்

அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 442 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 666 ரேஷன் கார்டுகள் நடை முறையில் உள்ளன. இந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் சீரிய முயற்சியால் மின்னணு தொழில்நுட்பத்தில் பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இன்று (நேற்று) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 10 ஆயிரத்து 666 ரேஷன் கார்டுகளில் 82 ஆயிரத்து 302 ரேஷன் கார்டுகளுக்கு முதல் கட்டமாக ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வரப்பெற்று உள்ளன.

குறுஞ்செய்தி

ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளில் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு சம்பந்தமான குறுஞ்செய்தி வரும். இதை ரேஷன் கடைகளில் காண்பித்து ஸ்மார்ட் ரேஷன் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் கதிரேசன், மண்டல இணைப்பதிவாளர் தயாளன், வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story