எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது 1,800 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்


எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது 1,800 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்
x
தினத்தந்தி 2 April 2017 4:30 AM IST (Updated: 2 April 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது. இந்த பணியில் 1,800 ஆசிரிய– ஆசிரியைகள் ஈடுபடுகிறார்கள்.

நாகர்கோவில்,

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ– மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. பிளஸ்–2 தேர்வை குமரி மாவட்டத்தில் 11,725 மாணவர்களும், 13,962 மாணவிகளுமாக மொத்தம் 25,687 பேர் எழுதினார்கள்.

 இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை குமரி மாவட்டத்தில் 12,706 மாணவர்களும், 12,777 மாணவிகளும் ஆக மொத்தம் 25,483 பேர் எழுதினர்.

இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ– மாணவிகளுக்கான விடைத்தாள்கள் திருத்தும்பணி நேற்று தொடங்கியது. இதற்காக நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில் சிறுமலர் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், தக்கலை கல்வி மாவட்டத்தில் நெய்யூர் எல்.எம்.எஸ். மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் படந்தாலுமூடு திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1,800 ஆசிரியர்கள்

முதல் நாளான நேற்று தமிழ் மற்றும் ஆங்கிலம் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்தது. இந்த விடைத்தாள்களை 3 மையங்களிலும் 180 முதன்மை விடைத்தாள் திருத்தும் அலுவலர்கள் மேற்கொண்டார்கள். பிற மாவட்டங்களில் இருந்து அனைத்து பாடங்களுக்குரிய விடைத்தாள்களும் குமரி மாவட்டத்துக்கு வந்து சேர்ந்து விட்டன.

நாகர்கோவிலில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஒழுகினசேரி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் மேற்பார்வையிலும், நெய்யூரில் தலக்குளம் பள்ளி தலைமை ஆசிரியர் சுனில் மேற்பார்வையிலும், படந்தாலுமூட்டில் கீழ்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் மேற்பார்வையிலும் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. குமரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.விடைத்தாள்கள் திருத்தும் பணியில் சுமார் 1,800 ஆசிரிய– ஆசிரியைகள் ஈடுபடுகிறார்கள்.

பிளஸ்–2

இதேபோல் வருகிற 5–ந் தேதி முதல் பிளஸ்–2  விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்குகிறது. இதற்காக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தக்கலை கல்வி மாவட்டத்தில் குளச்சல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியிலும், குழித்துறை கல்வி மாவட்டத்தில் திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியில் சுமார் 1,100 ஆசிரிய– ஆசிரியைகள் ஈடுபட உள்ளனர்.

நாகர்கோவிலில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி நடராஜன் மேற்பார்வையிலும், குளச்சலில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி சாமுவேல் மேற்பார்வையிலும், திருத்துவபுரத்தில் நடைபெறும் விடைத்தாள் திருத்தும் பணி குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி மோகனன் மேற்பார்வையிலும் நடைபெற உள்ளது.


Next Story