நகைக்காக கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு


நகைக்காக கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 1 April 2017 11:30 PM GMT (Updated: 1 April 2017 8:44 PM GMT)

நாகர்கோவிலில் நகைக்காக கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு திசையன்விளை டெலிபோன் கேபிள் குழியில் புதைத்தது அம்பலம்

திருவட்டார்,


குமரி மாவட்டம் திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்தவர் இன்னசென்ட் (வயது 42), தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 25–ந்தேதி சசிகலா நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் கலா என்பவரை பார்க்க சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி இன்னசென்ட் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சசிகலா குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், சசிகலா நாகர்கோவிலில் கலாவை பார்க்க சென்றபோது, அவர் அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு கலாவும், அவருடைய கணவர் முருகேசனும் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

கணவன்–மனைவி கைது


இதைதொடர்ந்து, கணவன்–மனைவி கலா, முருகேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சசிகலாவை கொன்று அவரது உடலை திசையன்விளை பகுதிக்கு கொண்டு வீசியதாக கூறினர். இதைத்தொடர்ந்து கலா, முருகேசன் ஆகியோரை போலீசார் அழைத்துக்கொண்டு அங்கு சென்று பார்த்தனர். ஆனால் அவர்கள் சொன்ன இடத்தில் பெண் உடல் எதுவும் இல்லை.

பிணம் சிக்கியது


தொடர்ந்து, திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டானி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சசிகலாவின் உடலை தேடும் பணி நடந்தது. இந்தநிலையில், திசையன்விளையில் பட்டரைபத்திவிளையில் சாலையோரம் தொலைப்பேசி கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழியில் புதைக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இந்த கொலையில் வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த வாலிபர் தலைமறைவானார். அந்த வாலிபரையும், கலா முருகேசன் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story