ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்காக காமாட்சி விளக்கு, புடவை வினியோகம் அ.தி.மு.க.(அம்மா) கட்சியினர் 3 பேர் கைது


ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்காக காமாட்சி விளக்கு, புடவை வினியோகம் அ.தி.மு.க.(அம்மா) கட்சியினர் 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 April 2017 4:45 AM IST (Updated: 2 April 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு காமாட்சி விளக்கு, புடவை வழங்கிய அ.தி.மு.க.(அம்மா) கட்சியை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராயபுரம்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் 12–ந்தேதி நடைபெறுகிறது. தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வருவதால் அதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை தேர்தல் கமி‌ஷனர் உமேஷ் சின்ஹா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அ.தி.மு.க.(அம்மா) கட்சி சார்பில் தண்டையார்பேட்டை நேதாஜி நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக சாஸ்திரி நகரைச் சேர்ந்த கருணாமூர்த்தி என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

புடவை வினியோகம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் பெண்களுக்கு புடவை வழங்கிக்கொண்டு இருந்தார். இதை அறிந்த தி.மு.க.வினர் தேர்தல் பறக்கும் படையினருடன் சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து ஆர்.கே.நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், புதுக்கோட்டையை சேர்ந்த நாராயணன் (வயது 25) என்பதும், அ.தி.மு.க.(அம்மா) கட்சியை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து வாக்காளர்களுக்கு வழங்க வைத்து இருந்த 20 புடவைகளை பறிமுதல் செய்தனர்.

காமாட்சி விளக்கு

இதேபோல் தண்டையார்பேட்டை இளைய முதலிதெருவில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 பேர் வாக்காளர்களுக்கு சிறிய அளவிலான காமாட்சி விளக்கு மற்றும் குத்து விளக்கு வினியோகம் செய்து கொண்டிருந்தனர்.

இதை பார்த்த அங்கிருந்த தி.மு.க.வினர் காமாட்சி விளக்கு வழங்கிய 2 பேரையும் மடக்கிப் பிடித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், சிவகுமார்(28), பிரசன்னா(29) என்பதும், அ.தி.மு.க.(அம்மா) கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story