அரசு பஸ் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது தந்தை-மகள் உள்பட 3 பேர் சாவு


அரசு பஸ் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது தந்தை-மகள் உள்பட 3 பேர் சாவு
x
தினத்தந்தி 2 April 2017 5:10 AM IST (Updated: 2 April 2017 5:10 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரி அருகே டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய அரசு பஸ், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இந்த விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

பல்லாரி,

பல்லாரி அருகே டயர் வெடித்ததால் தறிகெட்டு ஓடிய அரசு பஸ், 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இந்த விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

பஸ் டயர் வெடித்தது

பல்லாரி மாவட்டம் குருகோடுவில் இருந்து நேற்று காலையில் ஹூவினகடஹள்ளிக்கு அரசு பஸ் (கே.எஸ்.ஆர்.டி.சி) புறப்பட்டு சென்றது. அந்த பஸ் காலை 11 மணியளவில் கடஹள்ளி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. மேலும் அதே சாலையில் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. பின்னர் அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி பஸ் நின்றது.

இந்த நிலையில், பஸ் மோதிய வேகத்தில் 2 மோட்டார் சைக்கிள்களிலும் சென்ற பெண் உள்பட 3 பேர் தூக்கி வீசப்பட்டார்கள். இதில், தலையில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்கள். இதுபற்றி அறிந்ததும் கடஹள்ளி போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தார்கள்.

தந்தை-மகள்

அப்போது கடஹள்ளி அருகே கொலலு கிராமத்தை சேர்ந்த கொன்னப்பா (வயது 48), இவரது மகள் நந்திதா (21) என்பதும், மற்றொருவர் மகாந்தேஷ் (38) என்பதும் தெரிந்தது. இவர்களில் கொன்னப்பா, தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது விபத்தில் சிக்கி பலியாகி இருந்தார். மகாந்தேஷ் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்றவர் ஆவார்.

இந்த விபத்தில் அந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகள் எந்த விதமான காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். டயர் வெடித்ததால் தான் பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து கடஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story