கரசமங்கலம் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில்
காட்பாடி,
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி காட்பாடி தாலுகா கரசமங்கலம் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ள டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடினர். அதற்கு பதிலாக அதே பகுதியில் உள்ள ரெயில்வே கேட் அருகே கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து காட்பாடி– குடியாத்தம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ‘‘டாஸ்மாக் கடையை ரெயில்வே கேட் அருகே அமைக்கக் கூடாது. இந்த பகுதியில் கோவில், திருமண மண்டபம் உள்ளது. டாஸ்மாக் கடையை திறந்தால் பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக இருக்கும். மேலும் போதையில் ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து இறக்கும் சம்பவம் நடைபெறும்’’ என்றனர். அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். அதன்பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.