ஆம்பூரில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன மது பிரியர்கள் திண்டாட்டம்
ஆம்பூரில் ஏற்கனவே 9 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன.
ஆம்பூர்,
ஆம்பூரில் ஏற்கனவே 9 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இவற்றில் முதல் கட்டமாக 3 கடைகள் மூடப்பட்டன. அதன்பின் பை–பாஸ் சாலையில் 3 டாஸ்மாக் கடைகளும், பஜார் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகளும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வி.ஏ.கரீம் ரோடு பகுதியில் ஒரு கடையும் என 6 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நேற்று பை–பாஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட்டன.
ஆனால் பஜார் பகுதியில் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தன. இதனை அறிந்த பாரதிய ஜனதா கட்சியினர் அந்த 2 கடைகளுக்கு சென்று கடைகளை மூடுமாறு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து 2 கடைகளும் உடனடியாக மூடப்பட்டது. அசம்பாவிதம் நடக்காமல் இருந்த அந்த கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆம்பூரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஒரே நாளில் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் நேற்று கடை, கடையாக சென்று ஏமாற்றம் அடைந்தனர். நகரில் இருந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் மது கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த குடிமகன், ஆம்பூரை சுற்றி உள்ள கிராம பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்து சென்றனர். மேலும் கிராம பகுதியில் இருந்து சிலர் மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.