பாகனேரியில் விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பாகனேரியில் விதிமுறைகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
கல்லல்,
சிவகங்கை அருகே உள்ளது பாகனேரி. இங்குள்ள பஸ் நிலையம் அருகே 50 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகே அரசு ஆஸ்பத்திரி, கோவில்–ஆலயம், பள்ளிகள் உள்ளன. மேலும் இதன் அருகே குடிநீர் ஊருணி உள்ளதால், இவ்வழியாக பெண்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்திற்கு வரும் பெண்களும், குழந்தைகளும், பள்ளி செல்லும் மாணவ–மாணவிகளும் இந்த வழியாகவே செல்ல முடியும். பள்ளிகள், கோவில்கள், மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் டாஸ்மாக் கடை அமைக்கப்பட வேண்டும் என்று அரசு விதிமுறை இருந்தும், விதிமுறைகளை மீறி இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கிராமங்கள் சூழ்ந்த பாகனேரியில் டாஸ்மாக் கடை உள்ளதால் இங்கு வரும் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை கடந்து செல்லும்போது அச்சத்துடன் செல்கின்றனர். பார் இல்லாமல் இந்த டாஸ்மாக் கடை செயல்படுவதால், இங்கு வரும் குடிமகன்கள் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் உள்ளிட்டவற்றை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதி குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
கோரிக்கைகடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை ஓரம் உள்ள 3,400 டாஸ்மாக் கடைகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. இதனால் நெடுஞ்சாலை ஓரம் தவிர மற்ற ஊர்களில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த வகையில் பாகனேரியிலும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மதுபிரியர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பாகனேரியில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விதிமுறையை மீறி பொதுமக்களுக்கு சிரமத்தை அளிக்கும் வகையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.