பாப்பிரெட்டிப்பட்டியில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை 3 பேரிடம் போலீசார் விசாரணை


பாப்பிரெட்டிப்பட்டியில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை 3 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 April 2017 4:15 AM IST (Updated: 2 April 2017 9:59 PM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஜார் தெருவை சேர்ந்தவர் வேணுகோபால். இவருடைய மனைவி அமுதா (வயது 63). இவர்களுக்கு திருமணமான 2 பிள்ளைகள் உள்ளனர். மகள் அதே பகுதியில் வசித்து வருகிறார். மகன் பாலாஜி கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதனால் வேணுகோபாலும், அமுதாவும் அதே வீதியில் இனிப்பு கடை வைத்து நடத்தி வந்தனர்.

நேற்று முன்தினம் வேணுகோபால் காவேரிப்பட்டணத்தில் உள்ள மகன் பாலாஜி வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் அமுதா மட்டும் தனியாக இருந்தார். இரவு மகன் பாலாஜி, கணவர் வேணுகோபால் ஆகியோர் அமுதாவிடம் செல்போனில் பேசினர். இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அமுதாவின் வீடு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் வீட்டின் அருகே சென்று பார்த்தார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கழுத்தை அறுத்து கொலை

இதனால் அவர் வேணுகோபாலுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் தனது மகனுடன் பாப்பிரெட்டிப்பட்டிக்கு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அமுதா கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தட்சிணாமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு மற்றும் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சிறிது தூரம் ஓடி விட்டு அங்குள்ள ஒரு வீட்டு முன்பு நின்று கொண்டது. அமுதாவை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை.

3 பேரிடம் விசாரணை

கொலை செய்யப்பட்ட அமுதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த பயங்கர கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story