டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக திட்டக்குடியில், விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக திட்டக்குடியில்
திட்டக்குடி,
திட்டக்குடி பகுதி விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் முழுமையாக வழங்கப்பட வில்லை. இதில் விடுபட்டவர்களுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலை கொடுத்து, அரசு அறிவித்துள்ள 203 ரூபாயை கூலியாக வழங்கவேண்டும்.
வெலிங்டன் ஏரியில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களையும், காட்டாமணக்கு, ஆடாதொடா உள்ளிட்ட செடிகளையும் முழுமையாக அகற்ற வேண்டும். விவசாய கடன் 7 ஆயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கண்டன ஆர்ப்பாட்டம்காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், டெல்லியில் நடக்கும் விவசாய சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், துணை தலைவர் ராஜேந்திரன், விவசாயிகள் சங்க தலைவர் அன்பழகன், கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் காமராஜ், வக்கீல் கோவிந்தசாமி, நகர செயலாளர் வரதன், பொருளாளர் மாணிக்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.