அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறுவது அவசியம் ஐகோர்ட்டு பதிவாளர் சுற்றறிக்கை
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை
மதுரை,
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை ஆகியவற்றில் மத்திய–மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரை ஒரு தரப்பினராக சேர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஆணழகன், தமிழக முதல்–அமைச்சர் மற்றும் 4 அமைச்சர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்து முடிவு செய்வதற்காக வருகிற 11–ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் சார்பில் சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு மனுக்களை பெற்றுக்கொள்ளும் பிரிவு அலுவலர்களுக்கு திடீரென ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், மத்திய–மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை ஒரு தரப்பினராக சேர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளை, உடனடியாக தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அந்த வழக்குகளை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்து தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்ற பின்னரே அந்த வழக்கு மனுவுக்கு விசாரணை பட்டியல் எண் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.