சேலம் திருநங்கை பிரித்திகா யாசினி சப்–இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்பு
சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன், லாரி டிரைவர், இவருடைய மனைவி சுமதி
தர்மபுரி,
சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர் கலையரசன், லாரி டிரைவர், இவருடைய மனைவி சுமதி, இவர்களுக்கு ராகுல்குமார் என்ற மகனும், பிரித்திகா யாசினி (வயது 26) என்ற திருநங்கையும் உள்ளனர். இவர்களில் பிரித்திகா யாசினி சேலம் அரசு கலைக்கல்லூரியில் பி.சி.ஏ. படித்தார். தொடர்ந்து 2016–ம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை எழுதி வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் சென்னையில் ஒரு ஆண்டு பயிற்சி பெற்றார். பயிற்சிக்கு பின் அவருக்கு தர்மபுரி மாவட்டத்தில் வேலை செய்ய பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான ஆணையை திருநங்கை பிரித்திகா யாசினி, தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரிடம் நேற்று வழங்கி வாழ்த்து பெற்றார். பின்னர் அவர் சப்–இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார். அவருடன் பயிற்சி பெற்ற 14 பேரும் போலீஸ் சூப்பிரண்டிடம் வாழ்த்து பெற்றனர். திருநங்கை பிரித்திகா யாசினி உள்ளிட்ட அனைவருக்கும் எந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியிடம் ஒதுக்கப்பட உள்ளது என்பது இன்று (திங்கட்கிழமை) தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.