உளுந்தூர்பேட்டையில் தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு


உளுந்தூர்பேட்டையில் தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 2 April 2017 10:30 PM GMT (Updated: 2017-04-02T23:24:22+05:30)

உளுந்தூர்பேட்டையில் தடுப்புச்சுவரில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டை,

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்டது. நள்ளிரவு உளுந்தூர்பேட்டை நகர ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கு சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி தறிகெட்டு ஓடியது. அப்போது அச்சுமுறிந்ததால் லாரியின் முன்சங்கரங்கள் கழன்று ஓடின. இந்தவிபத்தில் லாரியின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. விபத்துக்குள்ளான லாரி டிரைவர், லாரியில் இருந்து இறங்கி தப்பியோடி விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான லாரியை, மீட்பு வாகனம் மூலம் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை–சென்னை சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story